புதுச்சேரியில் பேனர்களை உடனே அகற்ற வேண்டும்… மீறினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் – நீதிபதி எச்சரிக்கை

புதுச்சேரி நகரில் சட்டவிரோதமாக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் திறந்தவெளி பேனர் கட்டவுட் தடைச்சட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் அரசின் அந்த தடை உத்தரவை ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர் அமைப்புகள் என அனைவரும் தடைசட்டத்தை சமரசம் செய்துக்கொண்டு தொடர்ந்து பிறந்தநாள், திருமண நாள், கட்சி தலைவர்கள் வருகை, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி, புதிய திரைப்படம் வெளிவரும்போதும் சரி மேலும் அதிகார வர்க்கத்துடன் தான் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக சட்டம் ஒழுங்கை சீர்குழைப்பவர்களும் தைரியமாக நகரில் பேனர்கள் வைத்து வந்தார்கள்.

இந்த பேனர்களால் சுற்றுலா நகரமான புதுச்சேரி பொழிவற்ற நிலைக்கு தள்ளப்பட்டது, விபத்துக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என அடிக்கடி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். புதுச்சேரியில் திறந்தவெளி பேனர்கள் வைக்க தடைவிதித்து உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் காற்றில் பறக்கவிட்டனர். 2022 ஆம் ஆண்டும் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகம் காவல் துறையிடம் விளக்கம் கேட்க பேனர்கள் அப்புறப்படுத்தியதாக பதில் கூறினர். ஆனால் எதையும் அப்புறப்படுத்தாமலேயே பொய்யான தகவலை அரசு தரப்பு நீதிமன்றத்தில் கூறியதாக ஆதாரத்துடன் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

புதுச்சேரியில் தற்போதும் மாவட்டம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் நிறைந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி சந்திரசேகர் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவில் சட்டவிரோதமாக
புதுச்சேரியில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தட்டி, பேனர், ப்ளக் ஷோ போர்டு போன்ற விளம்பர பலகைகள் அனைத்தும். பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பொது போக்குவரத்து மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளதாக ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக திறந்தவெளி பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் இதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், பொதுப்பணி துறை , நகராட்சி ஆணையர்களுக்கும் இந்த உத்தரவின் நகலை மாவட்ட தலைமை நீதிபதி அனுப்பியுள்ளார்.