புதுச்சேரி அரசு வழங்கிய கார் அப்பப்போ பழுதாகி நடுவழியில் நின்னுடுது.! டூவிலரில் சட்டப்பேரவைக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்த ஆளும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன்

தனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட கார் கடந்த நான்கு மாதங்களாக பழுதானதிகியுள்ளது குறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரியில் ஆளும் பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

புதுச்சேரி 15வது சட்டபேரவையின் 4வது கூட்டம் இன்று காலை 9.45 மணிக்கு துவங்கியதும், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். பேரவையில் முதலாவதாக முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவுக்கு பேரவையில் முதல்வர் இரங்கல் தீர்மானம் வாசித்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 4 மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

இதனிடையே ஆளும் பாஜக ஆதரவு திருபுவனை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், தனக்கு அரசு சார்பில் 5 லட்சம் கி.மீ ஓடிய பழைய கார் பதவியேற்றபோது வழங்கப்பட்டதாகவும், அந்த கார் தொகுதியில் மக்கள் பணிகளுக்காக செல்லும்போது அடிக்கடி நடுவழியில் பழுதிகாதி நின்று விடுவதாகவும், இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனக்கு வழங்கப்பட்ட காரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, மாற்று கார் வழங்கக்கோரி சபாநாயகர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தனக்கு மாற்று கார் வழங்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தனக்கு கார் வழங்காத அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.