புதுச்சேரி சட்டப்பேரவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி 15 வது சட்டபேரவையின் 4 வது கூட்டத்தை இன்று காலை 9.45 மணிக்கு சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். பேரவையில் முதலாவதாக முன்னாள் அமைச்சர் ப.கண்ணன், வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பங்காரு அடிகளார், கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா, தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீபி, விஜயகாந்த் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதத்திற்கு அரசின் செலவினங்களுக்காக ரூ. 4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரம் இடைக்கால படஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பேரவையை சபாநாயகர் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார்.
முன்னதாக பேரவையில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் ரங்கசாமிக்கு உள்ளது. ஆனால் அவரை சார்ந்துள்ள கட்சியினர் சிலை வைக்க கூடாது என தடையாக உள்ளனர். திமுக சொந்த இடத்தில் கலைஞரின் சிலையை வைப்போம், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அஞ்சலிக்கு சபாநாயகர் வரவில்லை. பெயருக்காக அமைச்சர் ஒருவர் வந்தார். துறையின் அதிகாரிகள் செய்தது கடும் கோபத்தை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
தொடர்ந்து புதுச்சேரியின் வரவு செலவு என்ன என்று அரசுக்கு தெரியும். இருந்தபோதிலும் முழு பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்ய அரசு ஏன் முன்வரவில்லை. பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பிற மாநிலங்களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. ஆனால் புதுச்சேரியில்
முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதனை அலட்சியமாக கோஷ்டி பூசல் காரணமாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது பேரவையை நடத்தவில்லை எனக்கூறி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.