புதுச்சேரியில் கொட்டுது கோடை மழை.. இன்னும் 2 நாட்களுக்கு குட் நியூஸ்.!!

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாங கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று காலை புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் கடும் வெயிலின் காரணமாக சுற்றுலாத்தலங்களும் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வில்லியனூர், பாகூர், மடுகரை, திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஒருசில இடங்களில் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.. இதனால் இன்று மே 8ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மே 9ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 10, 11 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 12ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல மே 13இல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.