11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரியில் 97.75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.!!

இன்று வெளியான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் புதுச்சேரியில் 97.75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 2024 இல் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 3,909 மாணவர்களும் 3,701 மாணவிகளும் என மொத்தம் 7610 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி 7,439 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3,772 மாணவர்களும் 3,667 மாணவிகளும் அடங்குவர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 97.75 ஆகும்.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 100 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நிலையில், 53 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா ஒருவர் மட்டுமே 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 179 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால், அவர்கள் மார்ச் மாதம் தமிழக பாடத்தில் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.