இந்தியாவிலேயே பெரிய பீட்சா புதுச்சேரியில் விற்பனைக்கு வந்துள்ளது, தென்னிந்திய முறைப்படி சமைக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரியில் உள்ள உணவகங்கள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர், அந்த வகையில் புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் உள்ள “தி அர்பன் கஃபே” என்ற உணவகத்தில் இந்தியாவிலேயே பெரிய பீட்சா விற்பனைக்கு வந்துள்ளது.
36 அங்குலம் கொண்ட பீட்சா தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை, மேலும் இத்தாலிய வகை உணவான பீட்சா தென்னிந்திய முறைப்படி சமைத்து பரிமாறப்படுவது புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த பீட்சாவினுடைய அறிமுக நிகழ்ச்சி ஆரோவில் உள்ள தி அர்பன் கஃபே உணவகத்தில் நடைபெற்றது, புதுச்சேரி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பீட்சாவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவிலேயே பெரிய பீட்சா என்பதால் ஒரு பீட்சாவை 20 நபர்கள் வரை சாப்பிடும் அளவுக்கு இந்த பீட்சா உள்ளது. இதன் விலை ரூபாய். 2500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.