புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறாத அரசை கண்டித்து திமுக – காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறாத புதுச்சேரி அரசை கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் பேரவையில் இருந்து இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 7 வது நாளான இன்று வரவு–செலவு விவாதத்தின் இடையே குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத இருப்பதின் காரணம் என்ன என்றும், இந்த ஆண்டு அதற்கான நடவடிக்கை என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்கு பேவைத்தலைவர் தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணையை எதிர்க்கட்சித் தலைவர் கொடுக்க வேண்டும் என்றார். இதனை கண்டித்தும், இந்த ஆண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகாலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டபோது புதுச்சேரி அரசுக்கு 50 சதவீத இடங்களை கொடுக்க வேண்டும் என்று சட்டமாக்கி தான் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் குறைந்த அளவே இடங்களை பெற்று வந்தனர். இந்த ஆண்டு அதுவும் பஞ்சாயத்து பேசி குறைந்த அளவு இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்படுகிறது. ஆகவே, இந்த ஆண்டு புதுச்சேரி அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து 50 சதவீத இடங்களை கண்டிப்பாக பெற வேண்டும். அதேபோல் முதுநிலை மருத்துவ சேர்க்கையிலும் 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதை செய்ய தவறும் பட்சத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மக்கள்திரள் தொடர் போராட்டம் நடத்தப்படும். மேலும் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தை நாடவும் திமுக தயங்காது என தெரிவித்தார்.