புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று பந்த் போராட்டம்… கடைகள் அடைப்பு… ஒருசில அரசு பேருந்துகள் மட்டும் இயக்கம்.!

புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி ஆளும் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், மின் கட்டணத்தில் உள்ள சர்சார்ஜ்களை நீக்க வேண்டும், மின்துறையை தனியார் மயமாக்ககூடாது, டிஜிட்டல் மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. ஒரு சில அரசு பேருந்துகள் மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் குபேர் அங்காடி, நேரு வீதி, அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, காமராஜ் வீதி உள்ளிட்ட நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் திரையரங்குகளில் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்பு காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மின்கட்டண உயர்வை கண்டித்து மறைமலையடிகள் சாலை, காமராஜ் சிலை சந்திப்பு, இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.