புதுச்சேரி மக்களே அலர்ட்: துணை ஜனாதிபதி வருகை – 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

மூன்று நாள் அரசுமுறை பயணமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இன்று புதுச்சேரி வருகின்றார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மூன்று நாள் அரசு முறை‌ பயணமாக இன்று புதுச்சேரி வருகின்றார். தொடர்ந்து, நாளை 16ம் தேதி திங்கட்கிழமை ஜிப்மரிலும், 17ம் தேதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, உயர் கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக சென்னை விமானத்தில் இருந்து இன்று மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, 1:10 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வரும் துணை ஜனாதிபதிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். பின் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக, கடற்கரை சாலை பழைய நீதி மன்றத்தில் வளாகத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு இரவு தங்குகின்றார்.

இதனிடையே துணை ஜனாதிபதி வருகையையொட்டி, புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்று நாட்களுக்கு கடற்கரை சாலை, டூமாஸ் சாலை, செயின்ட் லூயிஸ் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் துணை ஜனாதிபதி செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:
செஞ்சி சாலை சந்திப்பிலிருந்து பீச் சாலை சந்திப்பு வரை, கோர்ட் ஹெரிடேஜ் கெஸ்ட் ஹவுஸ் அருகே, வாகனங்களை நிறுத்தவும் அல்லது இயக்கவும் 15.06.2025 முதல் 17.06.2025 வரை அனுமதி இல்லை.

15.06.2025 அன்று மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை, லாஸ்பேட்டை விமான நிலைய சாலையிலிருந்து லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்புவரை கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

மூன்று நாட்களுக்கு வாகன இயக்கத் தடை விதிக்கப்படும் சாலைகள்:

பீச் ரோடு

டூமாஸ் தெரு

செயின்ட் லூயிஸ் தெரு

புஸ்ஸி வீதி (செஞ்சி சாலையிலிருந்து பீச் ரோடு வரை)

நேரு வீதி (செஞ்சி சாலையிலிருந்து செயின்ட் லூயிஸ் தெரு வரை)

லாரிஸ்டன் ரோடு (செஞ்சி சாலையிலிருந்து பீச் ரோடு வரை)

மணக்குள விநாயகர் கோயில் தெரு (ரங்கப்பிள்ளை தெருவிலிருந்து டூபே தெரு வரை)

பிரான்சாய்ஸ் மார்டின் தெரு (ரங்கப்பிள்ளை தெருவிலிருந்து டூபே தெரு வரை)