ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.!

வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா…கோவிந்தா..ரங்கா …. ரங்கா… என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்கனத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.

இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார்.

முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினார். அதனைத்தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்தார்.