இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக புதுச்சேரி மாநில அமைப்பாளருமான இரா. சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்குவங்கம், கர்நாடகா, புதுடெல்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக ஆளுநர்களை களத்தில் இறக்கி அரசியல் செய்வதும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதையும் ஒன்றிய பாஜக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்பது நாடறிந்த உண்மை.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்குமான அதிகாரம் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வுகாணும் அவலநிலை ஏற்பட்டதற்கு காரணம் பாஜக தான். மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநருக்கு தனியாக அதிகாரமில்லை என்றும் உச்சநீதிமன்றமே பலமுறை குட்டு வைத்தும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆளுநர்களுக்கு உரைக்கவில்லை என்றால் என்ன செய்வது.
புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை தான் இன்னும் தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்து வருகிறார். அதில் பழையபடி தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற துருபிடித்த வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி அவர் பாஜக தலைவராக இருந்தபொழுது என்னவெல்லாம் அரசியல் பேசினாரோ அதே பேச்சை தான் ஆளுநராக இருக்கும் இன்றும் பேசி வருகிறார். ஆளுநர் என்ற பதவியின் கவுரவத்தையும், தகுதியையும் குழிதோண்டி புதைத்து வருகிறார்.
கடந்த வாரம் சென்னை மழைவெள்ளம் பற்றி பேச வந்தவர் தமிழ்நாடு அரசு மீது கவிதை மழை பொழிந்தது அனைவரும் அறிந்ததே. அதுவே ஆளுநர் கடைபிடிக்கும் அநாகரிகத்தின் உச்சமாகும். இன்று தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையும், வெள்ளமும் எவரும் எதிர்பார்க்காத ஒரு பேரிடர் ஆகும். அதிலே மூக்கை நுழைத்த தமிழிசை திராவிட மாடல் அரசு திண்டாடுவதாகவும், தென் மாவட்டங்களை திமுக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், வெள்ளத்தை கையாள்வதில் அரசு தோல்வி கண்டதாகவும் நாகூசாமல் கூறியது எவ்வளவு பெரிய மோசடித்தனம். சென்னை வெள்ளத்தை சமாளித்து திறம்பட மக்களை மீட்டெடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய குழுவே பாராட்டியது என்பது தமிழிசையின் பார்வைக்கு தெரியவில்லை போலும். ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழையை பெற்ற தென் மாவட்டங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு சகஜ நிலைக்கு கொண்டு வந்ததை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த அம்மாவுக்கு மட்டும் அது தெரியவில்லை.
இந்த பேரிடருக்கு வேண்டிய நிதியளிக்க கோரிக்கை வைத்தபோது ஒன்றிய பாஜக அரசு பம்முகிறது. அதுபற்றி தமிழிசை ஏன் வாய்திறக்கக் கூடாது. ஏது பணம் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திமிரான பேச்சு தமிழகமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவருக்கு சற்றும் நான் சளைத்தவர் அல்ல என்பதை காட்டிக்கொள்ளத்தான் தமிழிசை முயல்கிறாரா?.
மக்களால் தேர்வு பெற தகுதியற்ற இந்த இரு பெண்மணிக்கும் தமிழக அரசியல் மீது எவ்வளவு ஆசை பாருங்கள்.
திராவிட மாடல் என்பது சமூக நீதியாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப் பெறுவது. தமிழிசை போன்ற சூத்திர சமூகம் டாக்டராக, இன்ஜினியராக, பட்டதாரியாக, ஆட்சியாளராக உயர்வதற்கான அடித்தளம் அது. கடந்த 100 ஆண்டு தமிழக முன்னேற்றமே அதுதான். அதைக்கண்டு அலரும் பாஜக–வினர் எதற்கெடுத்தாலும் திராவிட மாடலை ஒப்பிடுவதும், குறை காண்பதும் அற்பத்தனமானது.
இவ்வளவு பேசும் தமிழிசையே நீங்கள் பொறுப்பில் உள்ள இந்த புதுச்சேரியின் யோக்கியதை என்ன?. தலைமைச் செயலர், துறை செயலர் உள்ளிட்ட எந்த அதிகாரியும் வேலையே செய்வதில்லை என்று உங்களை மேடையில் வைத்துக்கொண்டே முதல்வர் ரங்கசாமி குற்றப்பத்திரிகை வாசித்தாரே. நீங்கள் தானே புதுச்சேரி மாநில தலைமை நிர்வாகி. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இதற்கு முன்பே சட்டப்பேரவைத் தலைவர் அதிகாரிகளின் செயல்பாடு அரசுக்கு எதிராக இருக்கிறது என்று எச்சரித்தாரே. தினம் தினம் நிர்வாகம் முடங்கிக்கிடப்பதாக ஆளும் அரசு புலம்புகிறதே. உங்கள் பதில் என்ன அதற்கு. உங்கள் நிர்வாகத்தின் சீர்கேடுகளை பட்டியல் போடவா?.
புதுச்சேரி நகர் பகுதி நிலத்தடியில் கடல் நீர் உட்புகுந்து உப்பு தன்மை கலந்துவிட்டதும், இன்னும் சிறிது காலத்தில் கிராமப்பகுதியிலும் நிலத்தடி நீர் உப்பு கலந்துவிடும் நிலையால் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஏதேனும் நீங்கள் கவலைப்பட்டீர்களா?.
புதுச்சேரியில் உள்ள 85 ஏரிகளின் நிலை குறித்தோ, 8 படுகை அணைகளின் பராமரிப்பு குறித்தோ, 400 குளங்கள் பறிபோனது பற்றியோ உங்களுக்கு யாதாவது அக்கறை உண்டா?.
போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் அல்லல்படுவதை தீர்க்கவோ, நெரிசலை தவிர்க்க ரூ. 30 கோடியில் பாதியில் நிற்கும் உப்பனாறு மேம்பாலத்தை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டீரா?.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படித்து வேலைக்காக அண்டை மாநிலங்களில் தஞ்சம்புகும் அவலத்தை போக்குவதற்கான முயற்சி உண்டா?.
அரசுத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏதாவது முயற்சி உண்டா?
சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிகிறார்களே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் உண்டா?.
அவசர கோலத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை மாணவர்களுக்கு திணித்தாயே. அதனை முன்னெடுக்க சரியான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உண்டா?.
100 நாள் வேலை 20 நாள் வேலையாக சுருங்கிக் கிடக்கிறதே அதை மீட்டெடுக்கும் வழிவகை உண்டா?.
கடல் அரிப்பில் இருந்து மீனவ மக்களை காப்பாற்ற விரிவான திட்டம் உண்டா?.
புதுச்சேரி – தின்டிவனம், புதுச்சேரி – சென்னை, புதுச்சேரி – காரைக்கால் இரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை உண்டா?.
அட்டவணை இனத்தவர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற சிறப்புக்கூறு நிதி மடைமாற்றி விடப்படுகிறதே. அதுபற்றி கவலை உண்டா?.
வேலைவாய்ப்பை உருவாக்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்க சிந்தித்தது உண்டா?.
புதுச்சேரியில் உற்பத்தி நிறுவனங்களாக இருந்து பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த ரோடியர், சுதேசி, பாரதி மில்கலை மீட்டெடுக்க நடவடிக்கை உண்டா?.
ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை உண்டா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 944 கோடிக்கு 96 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதுவரை ரூ. 356 கோடி ஒதுக்கப்பட்டு ரூ. 44 கோடிக்கு 31 பணிகள் முடிந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது என்றால் மீதி பணிகள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கவலைப்பட்டீரா?.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டெழுந்த மக்களுக்கு ப்ரீபெய்டு மின் கட்டண திட்டத்திற்கு அனுமதியளித்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளீர்களே நியாயமா?
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள், மசாஜ் சென்டர்கள், ஸ்பா போன்றவை மூலம் கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆளுநருக்கு கவலையில்லையா?.
இளைஞர்கள், மாணவர்கள் நாள்தோறும் சீரழிந்துவருவதற்கு காரணமாக இருக்கும் கஞ்சாவை ஒழிக்க உறுதியான நடவடிக்கை உண்டா?.
இதையெல்லாம் தாண்டி பெஸ்ட் புதுச்சேரியை ஃபாஸ்ட் புதுச்சேரியாக மாற்றவதாக கூறுகிறாயே அதற்கான புதிய முயற்சிகள் உண்டா?.
16–வது நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்காமல் அலட்சியமாக இருந்ததால் புதுச்சேரி மாநிலம் மிகப்பெரிய நிதி இழப்பும், பொருளாதார வளர்ச்சியும் தடைபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பற்றி கவலை உண்டா?.
இப்படி எண்ணற்ற சவால்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் நிலையில் இதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் தமிழ்நாட்டு அரசியலில் தலையை நுழைப்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. முதலில் ஆளுநர் என்ற கடமையை ஆற்ற முயலுங்கள். பிறகு அரசியலுக்கு வரலாம். உங்கள் ஆளுநர் பதவியை துறந்துவிட்டு அரசியல் அரங்கிற்கு வந்தால் நாங்களும் அதனை வரவேற்க தயாராக இருக்கிறோம். வரும் தேர்தலில் ஆவது நீங்கள் டெபாசிட் வாங்குவதை உறுதிச் செய்ய பாருங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.