எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதர் விஜயகாந்த்: முதல்வர் ரங்கசாமி புகழாரம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழக கட்சியின் நிறுவனத் தலைவருமான திரு விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.

தனது திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துக்களையும் நாட்டுப் பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் திரு விஜயகாந்த் அவர்கள். இதற்காக இந்திய அரசின் சிறந்த குடிமகனுக்கான விருதையும் பெற்றவர். தனது நடிப்பிற்காக கலைமாமணி விருது. எம்.ஜி.ஆர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், தனது ரசிகர்களால் கேப்டன் என்று பெருமையோடு அழைக்கப்படுவதையே பெரும் விருதாகக் கருதினார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கிய அவர், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் வெற்றிகரமான தலைவராக முத்திரை பதித்தவர்.

தனக்கு சரியென்று பட்டதை தைரியமாக, வெளிப்படையாகச் சொல்லும் போக்கு எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரை உலகிற்கு அடையாளப் படுத்தியுள்ளது. சினிமா, அரசியல் என ஒரு தனி மனிதராக அவர் சாதித்தவை உழைப்பை ஊன்றுகோலாகக் கொண்டவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரது இழப்பு திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும். ரசிகர்களுக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.