புதுச்சேரியில் இரண்டாவது நாளாக நீடிக்கும் மழை… கழிவு நீருடன் மழை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் இரவு சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடற்கரை சாலை, புஸ்ஸி வீதி, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜ் நகர், இந்திராகாந்தி சதுக்கம், கோரிமேடு உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும், அதேபோல் வில்லியனூர், மடுகரை, மதகடிப்பட்டு, காலப்பட்டு, பாகூர், திருக்கனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தொடர் மழை காரணமாக ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

நாளை 08.01.2024 அன்று புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால்,
புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படிவும், மேலும் கடல்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதால் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 08.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.