ஆய்வுக்கு சென்ற அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை முற்றுகையிட்ட விவசாயிகள்… பதில் அளிக்க முடியாமல் வேக வேகமாக புறப்பட்டு சென்றார்.!

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும் பயிர் சேதங்களை பார்வையிட வந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அவசர அவசரமாக ஆய்வு முடிந்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது, இதனால் புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிராம பகுதிகளான கிருமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதடமடைந்தன.

இந்நிலையில் சேதமடைந்த பயிர்களை நேரில் சென்று பார்வையிட சென்ற வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் லஷ்மிகாந்தன், வேளாண்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு மழை காலத்திற்கு முன்பாகவே கால்வாய்களை தூர்வார கோரி கொம்யூன் ஆணையரிடமும், சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது எதற்காக இங்கு வந்தீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அவசர அவசரமாக ஆய்வை முடிந்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.