தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று தலைதூக்கியுள்ளது. Blood Art என்று சொல்லக்கூடிய வகையில் ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து, விரும்புவர்களுக்கு அனுப்புவது. குறிப்பாக காதலன் காதலிக்கு அனுப்புவது, காதலி காதலனுக்கு அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்துக்கொண்டிருக்கிறது. Blood Art Centres என்று ஆரம்பித்து அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். புதுச்சேரியில் தற்போது இந்த Blood Art கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. எய்ட்ஸ் நோய் வரை கொண்டு செல்லக்கூடிய இந்த Blood Art ஐ புதுச்சேரியில் தடை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்க காயத்ரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் காயத்ரி ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்பை வெளிப்படுத்த பல லட்சம் வழிகள் இருக்கும் போது உயிர் காக்கும் இரத்தத்தை விரயம் செய்வது வேதனையளிக்கிறது. இளைஞர்களின் இந்த மோகம் ஆபத்தானது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள இந்த இரத்த ஓவிங்கள் புதுச்சேரியிலும் தடை செய்யப்பட வேண்டும்.
ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல.
உடலில் உள்ள ரத்தத்தை எடுக்கும் போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின், அதற்கு தேவையான ஊசியினை முறையாக பயன்படுத்தி ரத்தத்தை எடுத்து, பாதுகாப்பார்கள். ஆனால், ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதோடு மட்டுமல்லாமல் இரத்தம் எடுக்க பயன்படுத்துகின்ற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இதனால் எச்ஐவி தொற்று ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
புதுச்சேரி அரசு நலவழித்துறை இதனை உடனே தடை செய்ய ஆணை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.