புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை.! ஆளுநர் அதிரடி நடவடிக்கை

இதுகுறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் குழந்தைகள் வாங்கி உண்ணும் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் நச்சுப் பொருள்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் புதுச்சேரியில் தடை செய்யப்பட்டது.

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரச்சான்று பெறாதவர்கள், உடனடியாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சுமிட்டாய் விற்பனையைத் தொடங்கலாம். எவ்வளவு விரைவாக அவர்கள் உணவு பாதுகாப்பு தரச்சான்று பெறுகிறார்களோ அவ்வளவு விரைவாக வியாபாரத்தைத் தொடங்கலாம். அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள்மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.