புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேளையில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மலை மற்றும் வனப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டதாலும், அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போனதாலும் தண்ணீர், உணவு தேடி வரும் வனவிலங்குகள் மற்றும் விபத்துகளில் சிக்கி, காயமடையும் விலங்குகள், கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்படும் விலங்குகள் புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப்பின் இவை மீண்டும் வனப்பகுதிக்கு கொண்டுபோய் விடப்படுகின்றன.
தற்போது வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், இங்குள்ள பறவைகள், விலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.கொளுத்தும் வெயிலில் இருந்து பறவை, விலங்குகளை பாதுகாக்க அவற்றின் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரிக்காய், கீரைகள் மற்றும் காய்கறி கூட்டு உள்ளிட்ட குளிர்ச்சியான இயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. பெரிய பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள நீரில் மலை பாம்புகள் இறங்கி வெயில் தாக்கத்தை தணித்துக் கொள்கின்றன. மான்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவைகளுக்கு அகத்திகீரை, தர்ப்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரி உள்ளிட்டவை வழங்கி, வெப்பதை தணித்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஆமைகள் மீது குளிர்ந்த தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் குமரன் கூறுகையில், வெயில் காலத்தில் வனவிலங்குகள் குளிர்ச்சியான சூழ்நிலையை அதிகம் விரும்பும். அதனால் அவற்றை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கும் விலங்குகள் ஆரோக்கியமாக உள்ளன என்றார்.