புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும், பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியே இருப்பார் என சபாநாயகர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை அலுவல்களை காகிதமில்லா முறையில் நடத்தும் நோக்கத்தில், தேசிய மின்பேரவை செயலி ( Ne VA ) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கான கணினி சேவை மையம் சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலக ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கும் நேவா (NeVA) பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க, பிரத்தியேகமாக, அமைப்பு ஒருங்கிணைப்பாளர் (System Integrator) மூலம் சட்டப்பேரவை வளாகத்தில் நேவா பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சட்டப்பேரவையில் எழுப்பப்படும் வினாக்களும் மற்றும் அதற்கான விடைகளும் நேவா (NeVA) கம்ப்யூட்டர் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் செல்வம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியே தொடரும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியே இருப்பார். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 7-ந்தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழாவில் கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, கட்சியை தமிழக பகுதிக்கும் விரிவுபடுத்தி நிர்வாகிகளை நியமித்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்திலும் போட்டியிட தயாராகி வருவதாக அறிவித்தார். மேலும் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய முதல்வர் ரங்கசாமி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் புஸ்சி ஆனந்த் எனது நண்பர்கள். அதனால் அவர்கள் அவ்வப்போது என்னை சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் முதல்வர் ரங்கசாமி அவ்வப்போது விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழத்துடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வரும் நிலையில், சபாநாயகர் செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.