புதுச்சேரியில் இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.!!

புதுச்சேரி மாநிலத்தில் நீட் அல்லாத பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல், வரும் 22 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நீட் அல்லாத பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு அரசின் சென்டாக் அமைப்பு மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024-25 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீட் தேர்வு அல்லாத தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்.சி. (விவசாயம், நர்சிங், தோட்டக்கலை, பி.வி.எஸ்.சி, பி.பி.டி., பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி. (5 ஆண்டு சட்டபடிப்பு), பட்டயபடிப்புகள், இளநிலை கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் படிப்புகள், இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு சென்டாக் இணையதளமான (www.centacpuducherry.in) ல் விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிதற்கான கடைசி நாள் வருகிற 22 ந்தேதி ஆகும். பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை, கலை, அறிவியல், வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாடு இந்தியர்கள் தகுதியின் அடிப்படையில் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் சென்டாக் அமைப்பு தெரிவித்துள்ளது.