புதுச்சேரியில் வீடுகட்ட ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ஆம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 10-ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கி வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற்றது.
இதில் மானிய கோரிக்கைகள் மீது பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் அறிவித்தனர்.

அதன்படி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது மாலை நேரத்தில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி அதனை வாரத்தில் 5 நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும் என்றும், கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் இந்த ஆண்டே நிரப்பப்படும் எனவும் அறிவித்தார்.

தொடர்ந்து பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், நிர்வாக சங்கடங்கள் காரணமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், எனவே தலைமை செயலர் உள்ளிட்ட அரசு செயலர்கள் வேகமாக செயல்பட வேண்டுமென வலியுறுத்திய அவர்,
புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்றார். இதேபோல் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ. 2.5 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மாநில அரசு சார்பில் 2.5 லட்சம் வழங்கப்பட்டு மொத்தமாக ரூ.5 லட்சமாக வழங்கப்படும் என்றார். மேலும் புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் தேவை என்ற நிலை உள்ளதால் அதற்கான அடிக்கால் நாட்டப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார். மேலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களுக்கு புதுச்சேரியில் இருந்து ஈ-பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும், லிங்காரெட்டி பாளையம் சக்கரை ஆலை மற்றும் ஸ்பின்கோ நூற்பாலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,
அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றார். மேலும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையில் ஆண்டுக்கு 4 மாதம் மட்டும் வழங்கப்பட்டு வந்த மாட்டு தீவனம் இனி ஆண்டு முழுவதும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.