தமிழக ஆளுநர் ரவி அமலாக்கத்துறையை காட்டி பணக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் புதுச்சேரி மாநில உரிமைகளை அடகு வைத்து நாடகமாடும் என்.ஆர். காங்கிரசின் துரோகங்களையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி கழகம் சார்பில் கருவடிகுப்பம், பாரதி நகரில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், புதுச்சேரி மாநில அமைப்பாளருமான இரா. சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் சிறப்புறையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, திமுகவை அழிக்க யாரெல்லாம் நினைத்தார்கள், எத்தனை பிரதமர்கள் நினைத்தார்கள், நான் வரலாற்றை கூறுகின்றேன். ஒருமுறை ஜவஹர்லால் நேரு சொன்னார் திமுகவால் வெற்றிபெறவும் முடியாது, ஆட்சிக்கு வரவும் முடியாது என்று சொன்னார். ஆனால் அவரது மகள் இந்திராவை அழைத்து பிரதமராக்கிய பெருமை திமுகவைச்சாரும் என்றவர், அதேபோல் இன்று வரை நேருவின் குடும்பத்திற்கு விசுசமாக இந்த திமுக இருப்பதற்கு என்ன காரணம் என்றால் எங்களை அழிக்க நினைத்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர் யாராக இருந்தாலும் வரவேற்கும் மனப்பான்மை கொண்ட இயக்கம் திமுக என்றார்.
ஏனென்றால் மத்தியில் இருக்கும் அமைச்சர்களுக்கெல்லாம் கொழுப்பு அதிகமாகிவிட்டது. அதில் நம்மூரில் நெய்யை சாப்பிட்டுவிட்டு டில்லியில் உட்கார்ந்து மக்கள் ஓட்டு போடாமலே அமைச்சராகியுள்ளார் நிர்மலா சீத்தாரமன் என விமர்சனம் செய்த ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக குரல் கொடுத்தது. ஆனால் பாஜக அரசு அதை செய்யாததற்கு காரணம் யாரைவது ஒருத்தரை அனுப்பி மொத்தமாக சுரண்டிக்கொண்டு செல்ல இங்கு துணைநிலை ஆளுநர் தேவை என்றவர்,
புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநராக வருபவர்களுக்கு முதலில் எவ்வளவு பணம் இருந்தது என்று கேட்க வேண்டும். ஏனெனில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் கணக்கு கேட்கின்றீர்களே? அதேபோல புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் ஆளுநர்களுக்கு முன்பு எவ்வளவு சொத்து இருந்தது. பதவி முடிந்து போகும்போது எவ்வளவு சொத்து உள்ளது என்பதை கேட்க வேண்டும் என்றவர், நான் சவால் விட்டு கூறுகின்றேன் இந்த மாநிலத்தின் பணம் எல்லாவற்றையும் ஆளுநர்கள் சுருட்டிக்கொண்டு செல்கின்றார்கள். அவர்கள் மீது வழக்குப்போட முடியாது, கணக்கு கேட்க முடியாது அந்த திமிரில்தான் ஆளுநர்கள் ஆட்டம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்று கடுமையாக விமர்சித்த அவர்,
மேலும் பிரதமர் மோடி ஒவ்வொரு விஷயத்திலும் விலை கொடுத்து வாங்குவதற்கு, விபச்சாரியை விட மோசமான விபச்சாரியாக மோடி இருப்பதாக சாடிய ஆர்.எஸ்.பாரதி, மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 411 எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்கியவர் மோடி, எந்த பிரதமரும் செய்யாத ஒன்று என்று பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் ஒரு கவர்னர் உள்ளார். பீச்சில் மிட்டாய் விற்க்கத்தான் அவர் லாயக்கு என்றும், பேரவையில் திருடனை பிடிக்க போலீசார் துரத்தியது போல் ஓடினார். ஏனெனில் அவர் செய்வது அயோக்கியத்தனம். ராஜ்பவனின் உட்கார்ந்து கொண்டு அனைத்து பணக்காரர்களையெல்லாம் அழைத்து அமலாக்கத்துறையை காட்டி மிரட்டி பணம் பறிக்கின்றார். நான் பகிரங்கமாக சொல்கின்றேன், தமிழகத்தில் பேசினால் கூட வழக்கு பாயாது எனச் சொல்லலாம், நான் நீங்கள் ஆளும் மாநிலத்தில் (புதுச்சேரி) சொல்லுகின்றேன், பாஜக ஆளாத மாநிலத்தில் எல்லாம் கவர்னர்கள் மிகப்பெரிய பணக்காரர்களை, கள்ளமார்க்கெட்டில் பணத்தை கொள்ளை அடித்து வைத்திருப்பவர்களின் பட்டியல் தயாரித்து வருமானவரித்துறையிடமிருந்து நோட்டீசை பெற்று ராஜ்பவனில் உட்காரவைத்து வசூல் செய்கின்றார்கள் ஆளுநர்கள் என பகிரங்க குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் கூட்டணியில் இருக்க வேண்டும் என பெரிதும் கலைஞர் விரும்பினார். கனி மடியில் விழும் என கலைஞர் எதிர்பார்த்தார். ஆனால் அதுவேறு ஒருவரிடம் விழுந்தது. அதற்கு விஜயகாந்த் பொறுப்பு அல்ல. கூட இருந்தவர்கள் கெடுத்தார்கள், நயவஞ்சகர்கள் கெடுத்தார்கள் அதன் விளைவு, வாக்குகள் பிரிந்தது. திமுக தோற்றது. அதிமுக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்று முதலமைசாராக இருந்தால் இன்று வரை உயிரோடு இருந்திருப்பார். அதுமட்டுமல்ல ஜெயலலிதாவும் உயிரோடு இருந்திருப்பார் . ஏனெனில் அவர் தோற்று இருந்தால் அமெரிக்கா சென்று அவரது உடலை நன்றாக கவனித்து இருந்து இருப்பார். உயிரோடும் இருந்திருப்பார் என்றவர், விஜயகாந்தும் இறந்து போய் இருந்திருக்க மாட்டார். ஏனெனில் கலைஞர் முதலமைச்சர் ஆவது தடுத்து விட்டோமோ என்ற வருத்தத்தில் உடல்நலம் குன்றி இறந்துபோனார். ஆக ஒரு தேர்தலில் தவறான முடிவெடுத்தால் என்னென்ன நஷ்டங்கள் ஏற்படும் என்பதற்கு 2016 தேர்தல் ஒரு உதாரணம் என்றார். சி.ஏ.ஜி அளித்த ஊழல் குற்றசட்டில் 2024 க்கு பிறகு பிரதமர் மோடி ஆயுள்தண்டனை பெறும் குற்றவாளி ஆவார் என ஆர்.எஸ்.பாரதி பேசினார்.