இதுகுறித்து புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா. சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவின் அராஜக அதிகாரத்திற்கு அடிமைப்பட்டு கிடந்த உப்பளம் தொகுதியை சென்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகழகத்தின் செல்வாக்காலும் தனது கடின உழைப்பாலும் 57 % வாக்குகளை பெற்று மீட்டெடுத்து மாபெரும் வெற்றியினை பெற்றவர் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கென்னடி அவர்கள். தொகுதி மக்கள் அன்பழகனின் துரோக அரசியலுக்கு முடிவுகட்டி அவரை தொகுதியில் இருந்தே ஓரம் கட்டினர் என்பது அனைவரும் அறிந்ததே.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. கென்னடி அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பலஆண்டு முடங்கி கிடந்த தொகுதி பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வுகாண தான் தேர்ந்தெடுக்கப் பட்ட நாள் முதல் காலம் நேரம் பார்க்காமல் இரவு பகலாக உழைத்து வருகிறார். தினந் தினம் அதிகாரிகளை சந்திப்பதும் மக்களின் அன்றாட தேவைகளுக்கு தீர்வு காண்பதுமே அவரின் பணியாக உள்ளது. இதுவரை பின்தங்கி கிடந்த அந்த தொகுதி மேம்பாடு அடைவதை அன்பழகனால் பொறுக்க முடியவில்லை.
இதன் காரணமாக உப்பளம் தொகுதி தனது அசைக்க முடியாத கோட்டை என்ற இறுமாப்பில் இருந்த அதிமுக அன்பழகனால் தொகுதியில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது, அதனால் தனது அரசியலை தக்க வைக்க ஆளும் பா ஜ க – என்.ஆர். காங்கிரசின் அடிவருடியாக மாறிவிட்டார். ஆளும் கட்சியின் அத்தனை அத்து மீறல்களையும் அந்த கட்சியினரை விட ஆதரித்து அறிக்கை விட்டு தனது விசுவாசத்தை காட்டிக்கொள்வதில் முன்னிற்கிறார்.
இதுவரை தொகுதி பக்கம் திரும்பாதவர் தற்போது கென்னடியின் செல்வாக்கு அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ளாமல் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தாவி புரண்ட தொடங்கி உள்ளார், திடீர் என்று ஞானோதயம் வந்ததுபோல் தொகுதி பாசம் பொங்க நடிக்க தொடங்கி உள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள அன்பழகன் சிறிதும் பண்பற்ற முறையில் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் அடியாட்களுடன் மோதி தான் வகிக்கும் பதவிக்கு அருகதை இல்லாதவர் என்பதை நிரூபித்துள்ளார்.
உப்பளம் தொகுதியின் பாதர் சாகிப் வீதியில் பாதாள சாக்கடையின் மேல் சிலாப் இல்லாததால் சாக்கு போட்டு மூடியிருந்தது அதில் ஒன்றாம் வகுப்பு மாணவன் தவறிவிழ அவனது தாய் அவனை காப்பாற்றியுள்ளார் இந்த செய்தி அறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கென்னடி தனது வண்டியில் ஒரு சிமெண்ட் சிலப்பை எடுத்துச்சென்று திறந்த கிடந்த சாக்கடையை மூட முயன்றுள்ளார்.
இந்நிலையில் தனது ஆட்களுடன் அங்குவந்த அன்பழகன் சாக்கடை திறப்பை மூட முயன்ற சட்டமன்ற உறுப்பினர் கென்னடியை தடுத்து வம்புக்கு இழுத்துள்ளார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மக்களுக்கான பணியை செய்யவிடாமல் தடுத்து தனது அடியாட்களுடன் அராஜகத்தில் இறங்கியுள்ளார்.
திரு. கென்னடி அவர்கள் செவித்திறன் குறைந்த மாற்று திறனாளி என்று தெரிந்தும் அந்த குறையை சுட்டிக்காட்டி கேலிபேசும் விதத்தில் அவரது காது அருகில் திரும்ப திரும்ப சத்தமாக கத்தி மிகவும் அருவருக்கத்தக்க உடல் மொழியை அன்பழகன் வெளிப்படுத்தி உள்ளார். இது ஒரு அரசியல் கட்சி பொறுப்பாளரின் அநாகரிக செயலின் உச்சமாகும். இதுபோன்ற மேன் ஹேன்டாலிங் செயல் என்பது மனித சமூகத்தின் இழிவானதும் ஏற்கத்தகாததுமாகும் இப்படிப்பட்ட தரம்தாழ்ந்த செயலில் ஆதாயம் தேடுவதை அன்பழகன் வழக்கமாக கொண்டுள்ளார்.
திரு.கென்னடி ஓரிருதினங்களுக்கு முன்புதான் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து கால்வாய் தொடர்பான புகாரை முறையிட்டுள்ளார். இந்நிலையில் மாணவனுக்கு ஏற்பட்ட விபத்தை அறிந்து அதை சரிசெய்ய ஓர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அங்கு சென்றவரை பணிசெய்யவிடாமல் தடுத்து அவரை அவமரியாதை செய்துள்ள அன்பழகனின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது, இது மிக மோசமான அத்து மீறலாகும் இதுபோன்ற அநாகரிகமான – மலிவான அரசியலை எங்களுக்கும் செய்யத்தெரியும் ஆனால் இவரைப்போல் தரத்தாழ நாங்கள் என்றும் விரும்புவதில்லை. அன்பழகன் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் இல்லையேல் திருத்துவோம் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.