புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர், பங்குசந்தையில் தானியங்கி மென்பொருள் வழங்குவதாக தெரிவித்த அல்கோ டிரேடிங் என்ற நிறுவனம் இணையத்தில் வெளியிட்ட விளம்பரத்தை நம்பி, மொத்தம் ரூ.40,000 செலுத்தினார். ஆனால் அவருக்கு செயலியும் விளக்கமும் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஜெயராஜ் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா உத்தரவின்படி, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணை மற்றும் கைதுகள்:
விசாரணையின் போது, சென்னை வேளச்சேரி மற்றும் நந்தனம் பகுதியில் இயங்கி வந்த அல்கோ டிரேடிங் நிறுவனம் கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய இணைய வழி குற்றப்பதிவு முனையத்தில் (NCRP) பதிவாகியிருந்தன.
மேலும் அல்கோ டிரேடிங் நிறுவனம், தங்களை பங்கு சந்தை தானியங்கி மென்பொருள் வழங்கும் நம்பகமான நிறுவனமாக காட்டி, பல்வேறு இணைய வழி விளம்பரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இந்தியா முழுவதும் பலரை ஏமாற்றி வந்தது. இவர்களது முக்கிய உத்தி, இணையதளத்தில் தங்கள் விளம்பரங்களை பார்த்த நபர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, “ஒரே நாளில் ரூ.3,000 முதல் ரூ.6,000 வரையில் வருமானம் பெறலாம்” என நம்ப வைப்பது.
இந்த நிறுவனத்தினர் ஒவ்வொரு நபரிடமும் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை வசூலித்திருப்பதும், எந்த ஒரு மென்பொருளும் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது. ஏமாற்றப்பட்ட நபர்கள் பெரும்பாலானவர்கள் சிறு முதலீட்டை நம்பிய தொழில் முனைவோர்களாக தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தியாகராஜன், கீர்த்தி, அருண், ரோஸ்லின் மேரி, இருசவேல், வினோத் கமலி, கிறிஸ்டினா ஆகியோர் நடத்திய சோதனையில் நிறுவன உரிமையாளர் அஸ்வின் குமார் (வயது 32) கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
14 லேப்டாப்கள்
6 செல்போன்கள்
1 சொகுசு கார்
ரூ.7.3 லட்சம் நகட்பணம்
இணைய மோசடிக்குப் பயன்பட்ட பல்வேறு உபகரணங்கள்
மேலும், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட பல வங்கி கணக்குகள் – அதில் அவரது மனைவியின் மற்றும் நண்பர்களின் கணக்குகள் உள்ளடங்கும் – முடக்கப்பட்டுள்ளன.
காவல்துறை எச்சரிக்கை:
இந்த நிறுவனத்தின் மீது புதுச்சேரியில் மட்டும் ஏழு புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு வழங்கிய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு எச்சரிக்கை செய்தி:
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இருவரும் இணைந்து கூறியதாவது:
இணையத்தில் வேலை வாய்ப்பு, முதலீடு, டிஜிட்டல் வருமானம், பங்கு முதலீடு, குறைந்த விலையில் பொருட்கள் வழங்குகிறோம் போன்ற விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தவேண்டாம். சந்தேகம் இருப்பின், 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு உறுதி செய்த பிறகே முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
தற்போது, நாளொன்றுக்கு 40 முதல் 60 அழைப்புகள் இந்த இலவச எண்ணுக்கு வருவதாகவும், பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி தங்களை பாதுகாக்க வேண்டுமெனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.