மக்களவை தேர்தலில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் டெபாசிட் இழப்பார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, திமுக – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டித்தும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்க மோடி அரசு அதிகாரிகள் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இந்தியா கூட்டணி கட்சியின் செயல்பாடுகளை முடக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம் என்றும், தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் டெபாசிட் இழப்பார் என நாராயணசாமி தெரிவித்தார்.