வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரசை விழுங்கி விடும்… இதனால் என்.ஆர். காங்கிரஸ் காணமால் போய்விடும்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

பாஜக – அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி‌ என்றும், இந்த கூட்டணி கண்டிப்பாக படுதோல்வி அடையும் என புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த‌ ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச்சுவரத்தை நடத்தி நேற்று கூட்டணி உறுதி செய்துள்ளனர். இது சந்தர்ப்பவாத கூட்டணி. எந்த காலத்திலும் பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேராது என்று அதிமுக மாநில செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல முறை கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாஜக கட்சியுடன் எப்பொழுதும் கூட்டனி கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் தற்போது பாஜக அழுத்தம் கொடுத்ததன்பேரில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடையாது‌‌ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஏற்கனவே 2021ல் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. பாஜக கட்சி பணம் மற்றும் அதிகார பலத்தால் வெற்றிப்பெற்று ஆட்சியில் உள்ளனர். வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரசை விழுங்கி விடும். இதனால் என்.ஆர். காங்கிரஸ் காணமால் போய்விடும். இதேபோல் தமிழகத்தில் அதிமுக உடைக்கப்பட்டு, பலவீனமாக்கப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் மக்கள் பாஜகவை ஒதுக்கிவிட்டனர். இந்த கூட்டணி கண்டிப்பாக படுதோல்வி அடையும் என்றார்.