புதுச்சேரியில் காலாவதியான பீர் விற்பனை… பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் காலாவதியான 2-பீர் விற்பனை செய்த மதுபானக்கடைக்கு ரூ.75 ஆயிரம் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக வழங்க புதுச்சேரி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுச்சேரி வேல்ராமபட்டை பகுதியை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 03.11.2021 அன்று லாஸ்பேட்டை கொட்டுபாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபானம் விற்பனை கடையில் 6 பீர் பாட்டில்கள் வாங்கி உள்ளார். மேலும் அதற்கு உண்டான பணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்திருள்ளார். இதனையடுத்து அந்த 6 பீர் பாட்டில்களில் 2 பீர் பாட்டில்கள் காலாவதியாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக புதுச்சேரி அரசு உணவு பாதுகாப்பு துறைக்கு அந்த காலாவதியான பீர்பாட்டில்களை கொடுத்து அதன் சோதனை முடிவை பெற்றதில், பீர் காலாவதியானது என உறுதி செய்தார். பின்னர் தனியார் மதுபான விற்பனையாளர் மற்றும் மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு வழங்கக்கோரி புகார் அளித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் பூசல்கள் குறை தீர்வு அமர்வு தலைவர் முத்துவேல் தீர்ப்பு வழங்கினர். அதில் தனியார் மது விற்பனைக்கடை காலாவதியான மதுவிற்பனை செய்ததை உறுதி செய்ததை அடுத்து காலாவதியான இரண்டு பீர்பாட்டில்களுக்குண்டான ரூபாய் 240/- ஐ புகார்தாரர் பீமாராவுக்கு வழங்கவும், மேலும் முறையற்ற வணிகம் மற்றும் சேவை குறைப்பாட்டிற்காக ரூபாய் 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் நஷ்டஈடு வழங்கிடவும், மனுதாராருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்கு ரூபாய் 20,000 (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) மற்றும் வழக்கு செலவுதொகையாக ரூ.5000 (ரூபாய் ஐயாயிரம் மட்டும்) ஆக மொத்தம் ரூ75,240/- வழங்கிட தனியார் மதுபான கடைக்கு உத்தரவிட்டார். மேலும் தனியார் மதுபான கடை காலாவதியான மதுபானங்களை விற்பனை செய்வதற்கு தடைவிதித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்திரவிடபட்டுள்ளது.