புதுச்சேரியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஒருசில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தொடர்மழை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இன்றும் இரவு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக பாவாணன் நகர், புஸ்ஸி வீதி, கருவடிகுப்பம், பாரதி வீதி, மறைமலையடிகள் சாலை, ரெயின்போ நகர், இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. குறிப்பாக சாரம் மற்றும் பாவாணன் நகர் பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தொடர் மழை காரணமாக வாகனங்கள் நீரில் ஊர்ந்தபடி சென்றன.
இதனிடையே தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (10-08-2024) விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.