நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 140 க்கும் மேற்பட்டோர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனிபால் கென்னடி, சம்பத், வைத்தியநாதன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து மோடி அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி, பாராளுமன்ற ஜனநாயகத்தை முடக்கி இப்போது நாட்டு மக்கள் மத்தியில் பாராளுமன்றம் நடக்க வேண்டுமா? என்ற கேள்வி உருவாக்கியிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் மோடி, அமித்ஷா மற்றும் பாஜாகவின் சர்வாதிகாரம் உச்சகட்டத்திற்கு சென்று இந்திய நாட்டில் அடுத்து தேர்தலே வராது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற போர்வையில் அமெரிக்காவை போல குடியரசு தலைவர்தான் ஆட்சி செய்ய வேண்டுமென்று மோடி அந்த பதவியை எடுத்துக்கொண்டு, இந்த நாட்டில் எப்படி ஹிட்லர் இருந்தாரோ, எப்படி முசாதீன் இருந்தாரோ அதுபோன்று ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்துவதற்கான வேலைகளை மோடி செய்து கொண்டிருக்கிறார்.
ஆகவே அதை முறியடிக்க வேண்டிய சக்தி எதிர்கட்சிகளுக்கு உண்டு. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கடமை இந்தியா கூட்டணிக்கு உள்ளது. இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமென்றால் 2024 பாரளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி ஆட்சி தூக்கியெறியப்பட்டு, இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும் என்றார்.