கடும் எதிர்ப்பால் ஜிப்மர் மருத்துவமனை நாளை (22.01.2024) விடுமுறை அறிவிப்பை திரும்பப் பெற்றது…

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை திரும்பப்பெற்றுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் குடமுழுக்கு நிகழ்வை முன்னிட்டு நாடும் முழுவதும் மத்திய அரசு அலுவலங்களுக்கு நாளை 22ம் தேதி ( திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் வ 22ம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை புற (வெளி) நோயாளிகள் பார்வை இல்லை என்றும், மருத்துவமனை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து மருத்துவமனையை மூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனர் புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மருத்துவமனை மூடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். மருத்துவ பரிசோதனைகளுக்கு தேதி பெற்றவர்கள் மீண்டும் அந்த வாய்ப்பை பெற மூன்று மாதங்களாகலாம். மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவர். மருத்துவமனையை மூட வேண்டாம் எனக் கூறி மத்திய அரசுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரியில் நாளை வழக்கம் போல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் தொடரும் என ஜிப்மர் மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.

இதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிரான மனு திரும்ப பெறப்பட்டது.
நாளை வழக்கம்போல் மருத்துவமனை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.