“ஹிந்தி தெரியாது போடா” புதுச்சேரியில் யோகா தின பதாகைகளை கருப்பு மையால் அழித்து போராட்டம்!

யோகா நாள் விழாவிற்காக புதுச்சேரி நகரம் முழுவதும் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள‌ விளம்பர பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழி மட்டும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இந்தி வார்த்தைகளை கருப்பு மையால் அழித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக யோகா திருவிழா நாளை (மே 27ஆம் தேதி) புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற உள்ளது. இதற்காக அரசு சார்பில் நகரம் முழுவதும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பதாகைகளில் அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் முழுமையாக புறக்கணிப்பட்டிருப்பது தமிழ் பேசும் புதுச்சேரி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெதிராக தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துள்ளனர். “தமிழ் புதுச்சேரியின் மூலமொழி. இதை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. இது மொழி மீதான அவமதிப்பு” என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழில் பதாகைகள் ஏன் இல்லை? இதற்கு யார் பொறுப்பு? என்பதற்கான விளக்கங்களை அரசு விளக்க வேண்டுமென‌ கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதனிடையே காமராஜ் மணிமண்டபம், கிழக்கு கடற்கரை சாலை, இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஹிந்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த யோகா தின விளம்பர பலகைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு மையை கொண்டு அழித்தனர். மேலும் “ஹிந்தி தெரியாது போடா” என்ற‌ வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, ஹிந்தி மொழியை திணிப்பதாக கூறி புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.