மக்கள் மன்றத்தில் அளிக்கப்படும் பொதுமக்களின் புகார்களுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு: காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா உறுதி.!

புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில், காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் என்ற பெயரில் பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்து, அதற்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். அதேபோல் இந்த வாரம் மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காவல் நிலையத்தில், காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், கோட்டுச்சேரி காவல் வட்ட ஆய்வாளர் மர்த்தினி, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் லெனின் பாரதி, நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், திருப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இன்றைய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 20 புகார்கள் பெறப்பட்டன. அதில், காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்ளை பாதுகாத்து போதைப் பொருளின் பயன்பாட்டை தடுத்து நிறுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இட தகராறு புகார்கள், தனிநபர் புகார்கள், பெண்கள் சார்ந்த புகார்கள், போன்ற புகார்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் நேரடியாக அளித்தனர். புகார்களின் விவரங்களை கேட்டறிந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களிடம், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர், லட்சுமி சௌஜன்யா மக்கள் மன்றம் நிகழ்ச்சி தற்பொழுது திருநள்ளாறு காவல் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவில் சார்ந்த பிரச்சினைகள், சுற்றுப்புற பிரச்சினைகள், பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை புகார்களாக தன்னிடம் அளித்தனர். அளிக்கப்பட்ட அனைத்து புகார்களும் ஒரு வார காலத்திற்குள் தீர்க்க முயற்சிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மக்கள் மன்றம் நிகிழ்ச்சி அனைத்து பொதுமக்களுக்கும் சென்று சேர்க்கும் வகையில் கல்லூரி மாணவர்கள், பெண்கள் சங்கம் அழைத்து வைத்து மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் காரைக்கால் மாவட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் காரைக்கால் மாவட்ட காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நகரின் முக்கிய சந்திப்புகளில் இலவச குடிநீர் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் திரிசூல் மூலம் மாவட்டத்தில் சில நாட்களில் செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதேபோல் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி தெற்கு காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 12 புகார்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.