புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணி முதலே கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று விநாயகர் தரிசித்து வருகின்றனர். மேலும் இன்று தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக லட்டு வழங்கபட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவிலை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.