காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அமைச்சர்கள் வெளியேறியதற்கு நாரயணசாமிதான் முழு காரணம்.! அமைச்சர் நமச்சிவாயம் பகிரங்க குற்றச்சாட்டு

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அமைச்சர்கள் வெளியேறியதற்கு அப்போதைய முதல்வர் நாராயணசாமிதான் முழு காரணம் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட புனித மத்தியாஸ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். தொடர்ந்து அப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மதிய உணவின் தரத்தையும் சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்,
வரும் 14 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களை அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள் வெளியேறியதற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் புதுச்சேரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட ஏராளமானவர்கள் விருப்பம் தெரிவிப்பதால் வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுகின்றது எனவும், விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை முடிவு செய்து வேட்பாளர் அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.