யார் இந்த மேனகா: புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும், பிரச்சார வியூகங்களை வகுப்பதிலும் மற்ற கட்சிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், முதல் ஆளாக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 20 ஆம் தேதி வெளியிட்டார்.
தொடர்ந்து கூட்டணி இன்றி நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வரும் நிலையில், 10 பெண்கள் மற்றும் 10 ஆண்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் ரா.மேனகா என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சித்த மருத்துவரான இவர், காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முடித்தவர். சமூக ஈடுபாடு கொண்ட இவர், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

புதுச்சேரி நகரப் பகுதியில் இவர் நடத்திவரும் சித்த வைத்தியக் கூடத்தை, கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் திறந்து வைத்தார். லாஸ்பேட்டை தொகுதியின் தொகுதிச் செயலாளராக இருக்கும் இவரது கணவர் நிர்மல் சிங், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.