புதுச்சேரி எழுத்தாளர்கள், புத்தகச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 27-வது தேசிய புத்தகக் கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது. கண்காட்சியைப் புதுவை முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்து, 2023-ஆம் ஆண்டின் புதிய நூல்களையும் அவா் வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தார். அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், சு. செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ ஜான்குமாா், புதுச்சேரி எழுத்தாளா் புத்தகச் சங்கத் தலைவா் வி. முத்து, சிறப்புத் தலைவா் பேராசிரியா் பாஞ். ராமலிங்கம், புத்தகக் கண்காட்சிக் குழு காப்பாளா் வேல். சொ. இசைக்கலைவன், குழு செயலா் அரங்க. முருகையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.
வரும் 31 ம்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர். இதில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்களுக்கு தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, கண்காட்சியில் இடம்பெறும் நுால்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 1,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ்களும், 10 ஆயிரத்திற்கு மேல் புத்தகம் வாங்குவோர்களுக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலும் கண்காட்சியின் ஒரு பகுதியாக கவிதை,பேச்சு, வினாடி வினா, ஓவியப்போட்டி, மாணவர்கள், பொதுமக்கள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.