புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக புதுச்சேரி அரசு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா,
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்பட நான்கு தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இங்கு பயிலும் 830 முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு இன்று 5ம் தேதி முதல் முதலாண்டு மருத்துவத் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வுகள் அனைத்தும் திடீரென்று ரத்து செய்து இணைப்பு கல்லூரிகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு சுற்ற்றிக்கை அனுப்பட்டுள்ள செய்தி அறிந்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முதலாம் ஆண்டு தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தனியார் மருத்துவ கல்லூரியின் 250 இடங்களில் 150 இடங்களுக்கு மட்டுமே புதுச்சேரி பல்கலைக்கழகம் அப்ளியேட் அளித்துள்ளது மீதமுள்ள 100 இடங்களுக்கு இன்னும் இணைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை, அதற்கு அனுமதி அளிக்க காலதாமதம் ஆவதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் மாறுபட்ட கருத்தும் உள்ளது.
மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்றார். இதுகுறித்து பல்கலைக்கழகத் தரப்பு உரிய விளக்கங்கள் ஏதும் இன்று வரை தருவதில் இழுபறி நீடிக்கிறது. ஆகவே, இதுகுறித்து புதுச்சேரி அரசு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று இந்த அவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து தகவல் தனக்கு தெரியவில்லை என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி முழு விவரம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.