புதுச்சேரியில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 50-க்கும் மேற்பட்ட முதியவர்கள் ராஜஸ்தானில் சிறைப்பிடிப்பு… உதவிக்கரம் நீட்டிய திமுக.!

புதுச்சேரி லாஸ்பேட்டை, கோவிந்தாசலை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வயதானவர்கள் காசி யாத்திரை சென்றுள்ளனர். புதுச்சேரி முதல் டெல்லி வரை அனைத்து மாநிலங்களுக்கும் பெர்மிட் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஆக்ரா சென்றவர்கள் ஜெய்ப்பூர் வழியாக உத்திரபிரதேச மாநிலம் காசிக்கு சென்றுகொண்டிருந்தபோது , ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி வழியாக சென்றபோது அவர்கள் சென்ற பேருந்திற்கு பெர்மிட் இல்லை எனக்கூறி, பேருந்தை பறிமுதல் செய்து, பயணிகளை அங்குள்ள போக்குவரத்து அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி வைத்துளளனர். மேலும் பர்மிட்டிற்கு பணம் கேட்டு அவர்கள் மிரட்டுவதாகவும், உணவு, தண்ணீர் கூட இல்லாமல் தவிப்பதாகவும், எனவே புதுச்சேரி அரசு உடனடியாக தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாத்திரை சென்றுள்ளவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, முதல்வர் ரங்சாமியை தொடர்பு கொண்டு, ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ள புதுச்சேரி பக்தர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மேலும், அவர்களை விடுவிக்க காலதாமதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பக்தர்களின் உறவினர்கள் இங்குள்ள ராஜஸ்தான் வாகனங்களை சிறைபிடிப்பில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் சட்டம்–ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகும். ஆகவே, விரைவாக ராஜஸ்தான் அரசிடம் பேசி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோரையும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடர்பு கொண்டு, காசி யாத்திரைக்கு சென்ற பயணிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே ராஜஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 10 பக்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவுறுத்தலின்பேரில் அத்தொகுதி திமுக பொறுப்பாளர், திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் தமது சொந்த நிதியில் இருந்து ரூ. 60 ஆயிரத்தை ராஜஸ்தானில் உள்ளவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார். இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் தங்களை மீட்க உதவி செய்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்டோருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.