புதுச்சேரி கடலில் இறங்கி குளித்தால் அபராதம்.! உயிரிழப்பை தடுக்க அரசு அதிரடி

புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் தடையை மீறி கடலில் குளித்தால் அபராதம் விதிக்க சுற்றுலாத்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதிநாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புவது கடற்கரையைத்தான். அந்த வகை
வகையில் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி நகரில் உள்ள காந்தி சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதி, பாண்டிமெரினா, பாரடைஸ் பீச், ரூபி கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி கடற்பகுதி சமீபகாலமாக அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல் ஆழமான பகுதியாகவும் உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் இறங்கியும், அமர்ந்தும் ரசிப்பதற்காக செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து புயல் கனமழை காரணமாக அந்த செயற்கை மணல் திட்டும் கடல் சீற்றத்தில் மூழ்கி விட்டது. இதனால் கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் மூழ்கி பலியாவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு கடற்கரையில் 50 க்கும் மேற்பட்டோர் மூழ்கி பலியாகியுள்ளனர். கடந்த புத்தாண்டு அன்று 4 மாணவர்களும், அடுத்தடுத்து 2 பேர் என கடந்த 20 நாட்களில் 6 பேர் கடலில் குளித்தபோது மூழ்கி பலியானார்கள்.

ஆகவே சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் குளிக்க தடை அமலில் உள்ள நிலையில், உயிரிழப்பை தடுக்கும் வகையில் தடையை மீறி கடலில் குளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென புதுச்சேரி சுற்றுலாத்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து இது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து தடையை மீறி கடலில் குளிப்பவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை வழங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.