பாராளுமன்றத்திற்கு மறுபடியும் போகவேண்டுமா? என்று நினைக்கும்போது கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலை செய்யும் மோடியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் போகத்தான் வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளமாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி சூளுரைத்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் மீண்டும் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், தற்போதைய எம்.பியுமான வைத்திலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். ஆகவே காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் மாநில நிர்வாகிகள் இந்தியா கூட்டணி கட்சிகளான திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி அலுவலகத்திற்கு சென்று நன்றி தெரிவித்து ஆதரவளிக்க கேட்டுக்கொண்டார்கள்.
புதுச்சேரியில் பிரதான எதிர்கட்சியான திமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற வைத்திலிங்கத்தை திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான இரா, சிவா உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் இரா. சிவா இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை நாம் ஒற்றுமையாக இருந்து கடந்த முறை வாங்கிய வாக்குகளை விட அதிகம் பெற்று வெற்றி பெறச்செய்ய வேண்டும். கொள்ளையடித்த பணத்தை நம்பி பாஜக தேர்தல் களத்தில் நிற்கிறது. அதற்கு புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு வந்தபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஒன்றைகூட நிறைவேற்றவில்லை, மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. புதுச்சேரியில் ரெஸ்டோபார்வை திறந்துவிட்டு கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டார்கள். இதுதான் அவருடைய சாதனை என்று சாடிய அவர், தற்போது சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றார்கள். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியினை கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்த்திருக்கின்றார்கள். மூன்று மாதத்திற்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார் 200 சதவீதம் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்றார். ஆனால் நேற்று கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளார். இதுதான் அவர்கள் நிலை, அதே நேரம் அதிமுகவோ கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று கதவை திறந்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணி பலமான கூட்டணியாக இருக்கின்றது என்றும், இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி வந்தால்தான் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் அமையும் என்றவர், புதுச்சேரியில் வேட்பாளர் கண்டுபிடிக்க முடியாமல் நான்கு மாதமாக திணறிக் கொண்டிருக்கின்ற என். ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசை தூக்கி எறியப்பட வேண்டும் என்றார் நாராயணசாமி.
இறுதியில் பேசிய வைத்திலிங்கம் எம்.பி, 2019 பாராளுமன்றத்திற்கு நான் சென்றபோது மோசமான ஒரு பாராளுமன்றத்தை நான் சந்தித்து வந்தேன். மறுபடியும் பாராளுமன்றம் போக வேண்டுமா என்று நினைப்பது கஷ்டமாகத்தான் இருக்கின்றது. ஆனால் மோடியை எப்படியாவது நான் அழிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி நான் போகத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் பாராளுமன்றத்தில் எங்களைப் பேச விடாமல் தடுத்தது பாஜகவினர். நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்களை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியும், சஸ்பெண்ட் செய்துமே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது. உண்மையிலேயே இந்த நாட்டைக் காக்க வேண்டும் என்றால் பாஜக இருக்கக் கூடாது வரக்கூடாது. மீண்டும் பாஜக வந்து விட்டால் நாட்டில் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகும். எல்லாவற்றையும் மாற்றுவார்கள். எல்லா சட்டத்தையும் மாற்றுவார்கள். அந்த எண்ணம் அவர்களுக்கு இருக்கின்றது. இவர்களை வீழ்த்த மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று பேசினார் வைத்திலிங்கம்.