புதுச்சேரியில் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்று இருசக்கர் வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது தோழி மீது மோதி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் பேருந்து ஒட்டுனரிடம் முறையிட்ட போது பேருந்தின் ஒட்டுனர், நடத்துனர் மற்றும் உரிமையாளர் வழக்கறிஞரை தாக்கி கொலை மிரட்டல் விடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி வில்லியனூர் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன். இவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் திருமணம் செய்துகொள்ளவுள்ள செவிலியர் திவ்யா என்பவரை அவர் பணிபுரியும் மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துகொண்டு புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று தமிழ் அழகனின் இருசக்கர வாகனத்தை மோதுவது போல் சென்றுள்ளது.
இதில் தமிழ் அழகன் மற்றும் திவ்யா நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தமிழ் அழகன் பேருந்தை பின்தொடர்ந்து சென்று அரும்பார்த்தப்புரம் பகுதியில் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் ஏன் இப்படி அதிவேகமாக செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு பேருந்து ஓட்டுனர் ராஜசேகர் மற்றும் நடத்துனர் பிரசாந்த் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி பேருந்தை ஏற்றி கொலை செய்துவிட்டு அபராதம் கட்டிவிட்டு சென்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த உரிமையாளர் கோடீஸ்வரன் பேருந்தில் இருந்து இறங்கி வந்து ஒட்டுனர் மற்றும் நடத்துனருடன் சேர்ந்து தமிழ் அழகனை தாக்கியுள்ளனர், இதனை மறிக்க சென்ற திவ்வாயாவையும் தாக்கியுள்ளனர். இதில் காயடைந்த தமிழ் அழகன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில், தமிழ் அழகனின் தாயார் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒட்டுனர் ராஜசேகர் மற்றும் நடத்துனர் பிராச்ந்த் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பேருந்து உரிமையாளர் கோடிஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.