புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை எதிரொலியாக குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை ஒழிப்பதற்கும் ஆப்ரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் புதுச்சேரி முழுவதும் அதிகாலை முதல் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை ஒழிப்பதற்கும் ஆபரேஷன் திரிசூல் திட்டம் துவங்கப்பட்டது. இதன் காரணமாக ரவுடிகள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திடீரென மதுபான கடை திறப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரபல ரவுடி கர்ணன் தலைமையிலான கும்பல், கடந்த 26 ஆம் தேதி பாஜக பிரமுகர் உமாசங்கரை வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்க உள்ளதாக ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
அந்தவகையில் கொலை சம்பவம் நடைபெற்ற லாஸ்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் புதுச்சேரி முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பிரபல ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் பிரபல ரவுடிகள் 40-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்துள்ளனர்.