மது குடிப்போருக்கு தனி நலவாரியம்… இன்சூரன்ஸ்.. புதுச்சேரி சட்டப்பேரவையில் சலசலப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், புதுச்சேரியில் கோவில், பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் ரெஸ்டோ பார் திறக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதேபோல் தற்போது 7 புதிய மதுபான ஆலைகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், மது குடிப்போர் நலவாரியம் சங்கம் அமைக்க வேண்டும் என்றும், மது போதையில் இருப்பவர்கள் வீடுகளுக்கு செல்லும்போது விபத்தில் சிக்காமல் இருக்க ஓய்வு எடுக்க தனி இடம் வேண்டும், ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசமாக வழங்க வேண்டும், மது குடிப்போர் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு காப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மது குடிப்போர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் புதுச்சேரி மதுச்சேரியாக மாறும், இளம் விதைவைகள் அதிகரிப்பார்கள். மகளிர் மேம்பாட்டு துறை விதைவைகள் மேம்பாட்டு துறையாக மாறும் என பேசினார்.