பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்: ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் சென்று மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய‌ புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார்!

புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்ததால், தொகுதி திமுக சட்டமன்ற‌ உறுப்பினர் செந்தில்குமார் மாணவர்கள் அனைவரையும் தனது சொந்த செலவில் ஊட்டிக்கு இரண்டு நாள் சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், 10-ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் சிறந்த முறையில் பொதுத்தேர்வு எழுத ஊக்குவிக்கும் வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் சுற்றுலா‌ அழைத்து செல்ல ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

தொடர்ந்து‌ சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தான் கூறியதுபோல் தனது சொந்த செலவில், மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களைக் கொண்ட 34 பேர்குழுவை, தனி வாகனத்தில் ஊட்டிக்கு சுற்றுலா அனுப்பி வைத்தார். இந்த சுற்றுலா பயணத்தின் போது மாணவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தொட்டபெட்டா, படகு இல்லம், அரசு அருங்காட்சியகம், தேயிலை தொழிற்சாலை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்து கல்வியறிந்து மகிழ்ந்தனர். இது மாணவர்களின் மனச்சோர்வுக்கும், கற்றல் அறிவுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களுக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பாக நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.