“ஹேப்பி ஸ்டீரிட்” நிகழ்ச்சியால் அசுத்தமான புதுச்சேரி கடற்கரை.! கண்டுகொள்ளாத அரசு

புதுச்சேரி கடற்கரை சாலையில் தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சியில், குப்பைகளை அப்படியே வீசிச்சென்றதால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் இரண்டாவது முறையாக இன்று காலை ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் நடத்தியது. இதில் ஆடல், பாடல் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், சுற்றுலப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவருவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வண்ண வண்ண பேப்பர்களை கடற்கரை சாலையில் பறக்கவிட்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவற்றை முறையாக அகற்றி சுத்தம் செய்யாததால் கடற்கரை சாலை முழுவதும் வண்ண பேப்பர்கள், காலணிகள், முகக்கவசம், காலி பாட்டிகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் புதுச்சேரி கடற்கரையின் அழகு கேள்வி குறியாகி, சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.

மேலும் கடற்கரை காந்தி திடலில் அரசு அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்துபவர்கள் கடற்கரை அழகை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென விதி உள்ளபோது இன்று நடைபெற்ற ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சியில் இவை எதுவுமே பின்பற்றபடவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.