புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், எல்லோரும் ஒருமித்த குரலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை தேர்தலில் போட்டியிட தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்
மாநில அரசியல்தான் முக்கியம் என கருதுவதால் இதனை தவிர்த்து வந்தார்.
இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட 4 பேரின் பெயர்களை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.கவின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அவசர அழைப்பின் பெயரில் அமைச்சர் நமச்சிவாயம் பெங்களூர் சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நிர்மல்குமார் சுரானா பா.ஜனதா வெற்றி வாய்ப்புக்காக தாங்களே போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதே கருத்தையே முதலமைச்சர் ரங்கசாமியும் பா.ஜ.க கட்சி தலைமைக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல், புதுச்சேரியில் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற அமைச்சர் நமச்சிவாயத்தை போட்டியிட தனிப்பட்ட முறையில் அழைத்து அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.