முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எதிர்பார்ப்பு ஏதும் இல்லாத, மக்களை ஏமாற்றும் பட்ஜெட்: எதிர்கட்சி தலைவர் இரா. சிவா குற்றச்சாட்டு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.12,700 கோடி பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் எதிர்கட்சி தலைவர் இரா. சிவா நிருபர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் நீண்ட இழு பறிக்கு பின்னர், நிர்பந்தத்தின் காரணமாக முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். அதில் சில அறிவிப்புகளையும் தந்துள்ளார். புதுச்சேரிக்கு ஒன்றிய அரசின் சிறப்பு நிதி ஏதும் கிடைக்கவில்லை. பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பங்கேற்று இருந்தால் கூடுதல் நீதி பெற்றிருக்கலாம் என்பது போல கூறுகிறார்கள். நீண்ட கால திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இல்லை. குறிப்பாக தொழில் வளர்ச்சிக்கு எந்த ஒரு அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. அதோடு மின்துறை தனியார்மயம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், மக்களை கேட்காமல் ஸ்மார்ட் மீட்டர் எலக்ட்ரிக் மீட்டர் ப்ரீபெய்ட் மீட்டர் என யாரையும் கேட்காமல், அரசின் ஒப்புதல் இல்லாமல் 450 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. யாரிடம் கேட்டு இதனை செய்தார்கள், என்று தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் இந்த பட்ஜெட்டில் ரூ. 500 கோடியில் மின்துறை நவீனப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் நவீனப்படுத்தப்படும் என்ற திட்டமிடல் இல்லை. துறைமுகத்தை தூர்வாரி இருந்தால் சரக்கு கப்பல்களை கையாண்டு வருவாய் ஈட்டி இருக்கலாம். ஆனால் அதற்கான திட்டமிடல் எதுவும் இல்லை.

காரைக்கால் துறைமுகத்தை முழுமையாக அதானிக்கு கொடுத்து விட்டார்களா? என்று தெரியவில்லை. காரைக்கால் துறைமுகத்தின் மூலம் தரப்படும் வருமானம் குறித்து தகவல்கள் பட்ஜெட்டில் இடம்பெரும். ஆனால் எதுவுமே இந்த பட்ஜெட்டில் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடையில் திறந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் போடப் போகிறீர்களா? இல்லை வேறு ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஸ்மார்ட் பொது விநியோக திட்டம் என்பது, கடமைக்கு 2 இடங்களில் சூப்பர் மார்க்கெட் போன்று திறந்து மக்களை ஏமாற்றப்போகின்றனரா?
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் இப்போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது கேட்டாலும் செய்கிறோம், பார்க்கலாம் என்பது போன்ற பதில்கள் வருகிறது.
ஆதி திராவிட மக்களுக்கு நீண்ட காலமாக மனைப்பட்டா வழங்கப்படவில்லை.
அந்த மக்களுக்கான தொலை நோக்கு திட்டங்கள் இல்லாமல், உதவித்தொகை உயர்வு என்பது போல பாக்கெட் மணிக்காக சில அறிவிப்புகளை கொடுத்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

கார்ப்பரேஷன்கள் திறப்பதை பற்றியும், நிதி ஒதுக்குவது குறித்த எந்த திட்டமும் இல்லை.
ஸ்மார்ட் சிட்டி வேலைகள் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கும், புதிய மேம்பாலங்கள் புறவழிச் சாலைகள் என எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. இதனால் உள்ளூர், வெளியூர் மக்கள் கடுமையாக போக்குவரத்து சிக்கித் தவிக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக கரசூர் வரைபடம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம், என்று கூறுவதை இந்த ஆண்டும் கூறியிருக்கிறார்கள். என்னதான் செய்யப் போகிறார்கள் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ரங்கசாமி நிர்பந்தத்தின் பேரில் இந்த பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏறடுத்தியிருக்க வேண்டிய பட்ஜெட் எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல், மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால்கென்னடி, சம்பத், நாக. தியாகராஜன், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.