புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம்… தலைவர்கள் அறிவிப்பு

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் – பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தனித்து களமிறங்கும் பட்சத்தில் மும்முனை போட்டி சூழல் உருவாகும்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் மீண்டும் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், தற்போதைய எம்.பியுமான வைத்திலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். ஆகவே காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் மாநில நிர்வாகிகள் இந்தியா கூட்டணி கட்சிகளான திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி அலுவலகத்திற்கு சென்று நன்றி தெரிவித்து, வைத்திலிங்கத்திற்கு ஆதரவளிக்க கேட்டுக்கொண்டார்கள். மேலும் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட தலைவர்களும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடப்போவதாக தொண்டர்கள் மத்தியில் அறிவித்தனர். இதனால் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

ஆனால் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கும் பா.ஜனதாவில் இதுவரை வேட்பாளர் யார்? என்பது தெரியவில்லை. தினசரி ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.