புதுச்சேரியில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த வாரம் மருத்துவமனையை அணுகிய நோயாளிகளில் டெங்கு, சிக்குன் குனியா மற்றும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் தனிவார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்,” என்றார்.
மேலும், “இந்த கொரோனா நோயாளிகள் மூன்று நாள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துவிடுகிறார்கள். இதுவரை எந்தவிதமான தீவிர பாதிப்பும் இல்லை. ஆனால் தமிழகத்தில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாமும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். கோரிமேடு டி.பி மருத்துவமனையில் 10 ஐசியூ படுக்கைகள் மற்றும் 2 வெண்டிலேட்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து அதிக பாதிப்புடையவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவர்” என்றார்.
தற்போது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனை அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், “கைகளை சுத்தமாக சோப்பால் கழுவ வேண்டும். மூக்கு மற்றும் வாயில் அடிக்கடி கை வைக்கக்கூடாது. சளி உள்ளவர்கள் இருமும்போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். நோயாளிகள் மட்டும் முககவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் அணிய தேவையில்லை. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வரவில்லை. இருந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.