திடீரென டெல்லி சென்ற துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்… பிரதமர் மோடியை சந்தித்து புதுச்சேரி மாநில அரசியல் சூழல் குறித்து விவாதிக்க திட்டம்.!

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ராஜ்நிவாசில் முக்கிய நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து மாலையில் பெரியகாலாப்பட்டு பாலமுருகன் திருக்கோயில் செடல் திருவிழா தேரோட்டத்தை தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர் திடீரென டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றார்.

இன்று பிரதமர் மோடி, உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார். அப்போது புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.2500 கோடி சிறப்பு நிதியுதவி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்குவார் என கூறப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் புதுச்சேரியில் பாஜக மாநில தலைவர் தேர்வில் இழுபறி நீடித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் துணை நிலை ஆளுநர் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. புதுச்சேரியில் நிலவும் அரசியல் சூழல், கூட்டணி கட்சியான என்.ஆர் காங்கிரசின் நிலைப்பாடு, பாஜக எம்எல்ஏக்களின் தனி அணி திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதுச்சேரியின் அரசியல் சூழலுக்கு ஏற்ப பாஜக மாநில தலைவராக யாரை நியமிக்கலாம் என பிரதமருடனான ஆலோசனையில் முக்கியமாக இடம் பெறும் என கூறப்படுகிறது.