புதுச்சேரியில் குப்பைகளை அகற்றாமல் குப்பை அகற்றியதாக பில்லை மட்டும் வைத்தால் அதற்கு எப்படி ஒப்புதல் தர முடியும் என்றும், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி வாசல்களிலும் கஞ்சா எளிமையாக கிடைக்கும் நிலை உள்ளதாக பாஜக ஆளும் புதுச்சேரியில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஆளும் அரசை குற்றம்சாட்டி பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்று வரும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சியை துணைநிலை ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டிஜிபி ஸ்ரீனிவாஸ் காவல் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன், சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிக மருத்துவ கல்லூரியில் உள்ளது. ஆனால் அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாக உள்ளனர், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி வாசல்களிலும் கஞ்சா எளிமையாக கிடைக்கிறது என்பது தான் அவலம், புதுச்சேரியில் குப்பைகளை அகற்றியதற்கு ஒரு தொகை வழங்குவதற்கான ஒரு கோப்பு என்னிடம் வந்தது நான் அதில் கையொப்பம் இடாமல், அதிகாரிகளிடம் புதுச்சேரி நகரம் முழுவதும் சுற்றி வாருங்கள் ஒரு வீதியில் கூட குப்பைகள் இல்லை என்று சொல்லுங்கள் நான் கையெழுத்து இடுகிறேன் என்றேன், குப்பைகளை அகற்றாமல் அதற்கான பில்லை மட்டும் அனுப்பினால் அதில் நான் எப்படி கையெழுத்திட முடியும் சில நேரங்களில் நாம் கடுமையான முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும் என்றார்.
பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் கஞ்சா, போதை ஸ்டேம்ப் உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில்,
அரசு நிகழ்ச்சி ஒன்றில் கஞ்சா விற்பனை, மற்றும் அரசின் குறைகளை சுட்டிக்காட்சி ஆளுநர் பேசியது புதுச்சேரியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.